அமெரிக்காவில் 41 வயது நபர் ஒருவர், சிறுநீர் கசிவு பிரச்னைக்கு தானாகவே தீர்வு காண முயன்றபோது விபரீதமான நிலையில் சிக்கியுள்ளார். சிறுநீர் கசிவைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மருத்துவரின் ஆலோசனையின்றி வலுவான ஒட்டுப் பசையை சிறுநீர் செல்லும் பாதையில் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சிறுநீர் கசிவு நின்றதால் பிரச்னை தீர்ந்துவிட்டதாக அவர் நினைத்துள்ளார். ஆனால் சில நாள்களிலேயே நிலைமை மோசமடைந்துள்ளது.

ஒட்டுப் பசை சிறுநீர் பாதைக்குள் உறைந்து, சுமார் 10 செ.மீ. நீளமுள்ள கடினமான கட்டியாக மாறியுள்ளது. இதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமல் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இந்த வலி சுமார் ஒரு வாரமாக நீடித்த நிலையிலும், அவர் மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் வலி அதிகரித்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையில் சிறுநீர் பாதைக்குள் கடினமான பொருள் அடைத்திருப்பது தெரியவந்தது. அது உறுதியான கட்டியாக மாறியிருந்ததால், வழக்கமான முறைகளில் அதை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அந்த ஒட்டுப் பசைக் கட்டியை அகற்றினர். இந்தச் சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சிறுநீர் தொடர்பான பிரச்னைகளுக்கு சுயமாக சிகிச்சை மேற்கொள்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

சிறுநீர் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வீட்டிலேயே சுயமாகத் தீர்வு காண முயற்சிக்கக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உடலுக்குள் வெளிப்பொருள்களை செலுத்துவது திசு சேதம், சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் தகுதியான மருத்துவர் அல்லது சிறுநீரக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.