தெலுங்கானா மாநிலம் சாத்நகர் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு திருட்டு வழக்கில் தலித் பெண் ஒருவரை சந்தேக வழக்கில் அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி காலை உடைத்துள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என ஏசிபி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, முதலில் திருட்டு வழக்கில் சந்தேகப்பட்டு என் கணவரை அழைத்து சென்றனர். அவரை முதலில் அடித்து துன்புறுத்திய நிலையில் பின்னர் வெளியே விட்டுவிட்டு என்னை அழைத்து சென்றனர். அவர்கள் என் சேலையை அவிழ்த்துவிட்டு சார்ட்ஸ் அணியும்படி வற்புறுத்தினார்.
பின்னர் ஒரு காவலர் என்னுடைய தலைமுடியைப் பிடித்து வைத்துக்கொண்டார். பின்னர் இரு காவலர்கள் என்னுடைய கால்களை லத்தியால் அடித்தனர். நான் தவறு செய்யவில்லை என்று அவர்களிடம் கெஞ்சி கதறினேன். அதோடு நான் திருட்டு சம்பவங்களில் எல்லாம் ஈடுபட மாட்டேன். அதற்கு பதிலாக பிச்சை எடுத்து கூட பிழைத்துக் கொள்வேன் என்றும் கூறினேன். இருப்பினும் அவர்கள் என்னை விடாது அடித்து துன்புறுத்தினர் என்று கண்ணீரோடு கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்கு பதிவு கூட செய்யாமல் அவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து துன்புறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.