கர்நாடக மாநிலத்தில் உள்ள திப்புரஹள்ளி பகுதியில் பிந்துஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். பிந்து ஸ்ரீ தனது கணவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் யோகா ஆசிரியைக்கும் தகாத உறவு இருப்பதாக நினைத்தார். இதனால் தனது கணவரை விட்டு தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் பிந்து யோகா ஆசிரியை கொலை செய்ய திட்டமிட்டார். இதனை அடுத்து பெங்களூருவைச் சேர்ந்த துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் சதீஷ் ரெட்டி என்பவரை அணுகி தனது திட்டத்தை கூறியுள்ளார்.
அதன்பிறகு சதீஷ் ரெட்டி மூன்று மாதங்களுக்கு முன்பு யோகா ஆசிரியை நடத்தி வரும் வகுப்பில் சேர்ந்து அவருடன் பழகி உள்ளார். அதன் பிறகு துப்பாக்கி சூடு பயிற்சி அளிப்பதாக தெரிவித்து யோகா ஆசிரியை வெளியே அழைத்து சென்றுள்ளார். மேலும் பின்னர் சதீஷ் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேர் யோகா ஆசிரியரின் ஆடைகளை அவிழ்த்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் இறந்து விட்டதாக நினைத்து சதீஷ் ரெட்டி ஒரு சிறிய அளவில் குழி தோண்டி அவரை புதைத்துள்ளார்.
எப்படியோ உயிர் பிழைத்த ஆசிரியை சுயநினைவுக்கு திரும்பி குழியிலிருந்து எழுந்து வனப்பகுதி வழியாக 2 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றார். அதன் பிறகு ஒரு வீட்டில் கொடுத்த ஆடைகளை அணிந்து கொண்டு சிட்லகட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷ் ரெட்டி, பிந்து ஸ்ரீ உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.