மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் கேனிங் என்ற பகுதியில் ஷாஹிதா ஷேக்(64) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி பெய்த கனமழையால், வீட்டின் அருகில் உள்ள குளத்திற்கு சுமார் மதியம் 2 மணியளவில் சென்று வருவதாக கூறிச்சென்றார்.

பின்னர் ஷாஹிதா குளத்தின் அருகில் சென்ற போது அவரது கையில் திடீரென விஷப்பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது . பின் வீட்டுக்கு திரும்பிய அவர் குடும்பத்தினரிடம் நடந்ததை கூறினார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் ஃபகிர் சாமியாரிடம் கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து சாமியார் மந்திரம் தந்திரங்களை செய்தார். மேலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக மருத்துவர்கள் அந்த குடும்பத்தினரிடம் எப்படிப்பட்ட பாம்பு கடித்தது என்ற கேள்வியை கேட்டனர். அதற்கு உயிரிழந்த பெண்ணின் மகன், எந்த வகை பாம்பு என்பது தெரியவில்லை என்று கூறினார். இதையடுத்து பாம்பு கடித்தவுடன் சாமியாரிடம் கொண்டு சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை கண்டித்த மருத்துவர்கள், பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சாமியாரை நம்பி உயிரை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சாமியாரை தேடி வருகின்றனர்.