தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் திருமறையூர் பகுதியில் பிரவீன் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஷெர்லின் கோல்ட்டா(35) என்ற பெண்ணும் கடந்த 2019-ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு டிஜோ வின்ஸ் (4) என்ற மகன் உள்ளார். கணவன் மனைவி இருவரும் நாசரேத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர். தற்போது ஷெர்லின் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 22-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. பிரவீன் குமார் குளியலறை சென்ற நேரத்தில் ஷெர்லின் பெட்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஷெர்லைன்னை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷெர்லின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஷெர்லின் தந்தை ஜெபசிங் சாமுவேல் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டிஜோ வின்ஸ் தனது அப்பா பிரவீன் அடித்ததால் தான் தாய் ஷெர்லின் இறந்து போயிட்டார் என மழலை மொழியில் பேசி உள்ளார். அந்த காட்சியை உறவினர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷெர்லின் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.