ஏஎஃப்சி (AFC) மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், வடகொரியாவின் ‘நாயேகோஹியாங்’ மகளிர் எஃப்சி கிளப் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த மே 23, 2026 அன்று தென்கொரியாவின் சுவோன் நகரில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில், ஜப்பானின் ‘டோக்கியோ வெர்டி பெலெசா’ அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்த சாதனையை படைத்தது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, தலைநகர் பியாங்யாங்கில் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வடகொரியாவின்  தலைவர் கிம் ஜாங் உன், வீராங்கனைகளை நேரில் சந்தித்து, அவர்களைக் கட்டிப்பிடித்து உணர்ச்சிப்பூர்வமாகத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். நாட்டின் ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘ரோடாங் சின்முன்’, இந்த வீராங்கனைகளை “தாய்நாட்டின் பெருமைமிகு மகள்கள்” எனப் போற்றியுள்ளது.

 

 

இந்த வரலாற்று வெற்றி வடகொரியாவிற்குப் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, வடகொரிய கால்பந்து அணி அண்டை நாடான தென்கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு விளையாடிப் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்தத் தொடரை வென்றதற்காக அந்த அணிக்கு சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹8.3 கோடி) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வடகொரியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்த பரிசுத்தொகையை அந்த கிளப் அணியால் முழுமையாகப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கிம் ஜாங் உன்னின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ‘கார்டு கமாண்ட்’ பிரிவுடன் தொடர்புடைய இந்த கிளப்பின் வெற்றி, தற்போது அந்த நாட்டின் தேசிய வலிமையின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.