இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணி நிர்வாகத்தையும் தேர்வுக் குழுவையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் விமல் குமார் உடனான நேர்காணலில், சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அஸ்வின் தன்னை சஞ்சு சாம்சனாகவே பாவித்து தேர்வுக் குழுவிற்கு சாட்டையடி பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், வீரர்களுக்கு ஓய்வு என்ற பெயரில் வழங்கப்படும் ‘ரெஸ்ட்’ கொள்கையை அஸ்வின் தனது பாணியில் கிண்டலடித்துள்ளார்.
அந்த வீடியோவில், சஞ்சு சாம்சனாக மாறிய அஸ்வின், “நான் டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று, நாட்டுக்காக கோப்பையை வென்று கொடுத்தவன்; என்னிடம் கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள் என்று தேர்வுக் குழுவினர் போலப் பேசிய விமல் குமாரிடம் கூறுகிறார்.
மேலும், “எனக்கு ஓய்வு எதுவும் தேவையில்லை, ஜிம்பாப்வே போன்ற பெருமைமிக்க கிரிக்கெட் நாட்டுக்குச் சென்று விளையாடவே விரும்புகிறேன்; 1999 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே வென்றதற்கு பழிவாங்க ஆசைப்படுகிறேன், தயவுசெய்து என்னை அணியில் எடுங்கள்” என நகைச்சுவையாகப் பேசி, தற்போதைய அணி நிர்வாகத்தின் முடிவுகளை சாடியுள்ளார்.
ஒரே ஒரு டி20 போட்டியில் சோபிக்கவில்லை என்பதற்காக உலகக் கோப்பை ஹீரோவை நீக்கிவிட்டு, வைபவ் சூர்யவன்சியைக் களமிறக்கிய நிர்வாகத்தின் அதிரடி மாற்றங்கள் மற்றும் வீரர்களைத் திணிக்கும் போக்குகளுக்கு எதிராக அஸ்வின் பேசியுள்ள இந்த வீடியோ கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
