குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சஞ்சய் போல்ரா தனது அதிர்ஷ்ட காருக்கு மிக வினோதமான முறையில் இறுதி ஊர்வலமும், அஞ்சலியும் செலுத்தி அடக்கம் செய்தார். அவரது கிராமமான பதர்ஷிங்காவில் நடந்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
2006 ஆம் ஆண்டு தனது குடும்ப பயன்பாட்டிற்காக வாங்கிய இந்த கார், அவருக்கு பல முன்னேற்றங்களை வழங்கியதாகவும், அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் நல்கியதாக சஞ்சய் போல்ரா நம்பினார். இதனால், அந்த காரை குடும்ப உறுப்பினர் போல கருதி, அதன் மரணத்திற்கு பிறகு தனி சடங்கு நடத்த அவர் முடிவு செய்தார்.
சடங்கு நிகழ்ச்சிக்காக 2000 அழைப்பிதழ்களை அச்சடித்த சஞ்சய், அவற்றை கிராம மக்களுக்குப் பரிமாறி, நவம்பர் 7-ந்தேதியன்று காருக்கு அஞ்சலி செலுத்த அழைத்தார். மந்திரங்கள் ஓதி, மலர் அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அந்த கார், தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கார் சமாதிக்குப் பின்பு உணவளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களுக்கு பூரி, சப்பாத்தி, சப்ஜி, லட்டு உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ந்தேதியன்று அந்த கார் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்த சஞ்சய் திட்டமிட்டுள்ளார்.