கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பல குடும்பங்கள் காணாமல் போன தங்கள் சொந்தங்களைத் தேடித் தவித்து வரும் நிலையில், இடிந்துபோன தங்கள் வீடுகளை விட்டு அகலாமல், உரிமையாளர்களுக்காகக் காத்திருக்கும் நாய்களின் விசுவாசம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தச் சம்பவங்கள் நெட்டிசன்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளன.

 

த்ரிசூலி பஜார் பகுதியில் நான்கு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த இடத்தில்தான் கழுத்தில் பட்டையுடன் கறுப்பு-வெள்ளை நிற நாய் ஒன்று கடந்த சில நாட்களாகக் காவல்காப்பது போல அமர்ந்திருக்கிறது. ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சத்தமும், கனரக வாகனங்களின் ஓசையும் அந்த நாயை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை.

மீட்புப் பணியாளர்கள் பிஸ்கட் கொடுத்தும், பல்வேறு செல்லப் பெயர்களைக் கூப்பிட்டும் அந்த நாய் திரும்பிப் கூடப் பார்ப்பதில்லை என்று தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். தனது எஜமானர்கள் எங்கு சென்றார்கள் என்று புரியாமல், அவர்கள் திரும்ப வரும் வரை இங்கிருந்து நகராது போலிருக்கிறது என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கூறுகின்றனர். தற்போது தன்னார்வலர்கள் அந்த நாய்க்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீரை அருகிலேயே வைத்து வருகின்றனர்.

இதேபோன்று, துங்கே  பகுதியிலும் ஒரு  சம்பவம் நடந்து வருகிறது. ‘லில்லி’ என்ற பெயருள்ள அந்த நாய், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஹோட்டல் உரிமையாளருக்காகத் தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கிறது. அந்த ஹோட்டல் உரிமையாளர் இன்னும் மீட்கப்படாத நிலையில், லில்லி அந்த இடிந்த கட்டடத்தை விட்டு நகர மறுக்கிறது. உள்ளூர் மக்களே தற்போது அந்த நாய்க்குத் தேவையான உணவை வழங்கி வருகின்றனர்.

மற்றொரு வைரல் வீடியோவில், வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த ஒரு வீட்டின் இடிபாடுகளுக்குள் சோர்வுடன் அமர்ந்திருக்கும் மற்றொரு நாயின் காட்சியும் இணையத்தில் பரவி வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய மனிதத் துயரத்தின் குறியீடாகவும், எஜமானர்கள் மீதான விலங்குகளின் தூய்மையான அன்பிற்கும் இந்தச் சம்பவங்கள் ஒரு சாட்சியாக அமைந்துள்ளன.