அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்த வாகனம் மீது எதிர்பாராத விதமாக திடீரென தன்னிச்சையாக ஓடிவந்த ஒரு டயர் மோதிய கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் சுமார் 12:30 மணியளவில்  நடந்த இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. எந்த வாகனத்திலிருந்தோ எதிர்பாராதவிதமாக கழன்றுவிட்ட அந்த டயர், நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரைத் தாண்டி தாறுமாறாகத் பாய்ந்து வந்துள்ளது.

எதிர்திசையில் அதிவேகமாக வந்த நிசான் எஸ்யூவி கார் மீது இந்த டயர் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த மோதலின் வீரியத்தால் காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கியதுடன், முன்பக்கக் கண்ணாடியும் நொடியில் சுக்குநூறாகச் சிதறியது. விபத்து நடப்பதற்குச் சில விநாடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், அந்தத் டயர் சாலையின் குறுக்கே கட்டுப்பாடே இல்லாமல் தாவி ஓடுவது பதிவாகியுள்ளது. இதனால் எதிர் திசையில் வந்த வாகன ஓட்டிகள் சற்றும் எதிர்பாராத இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க எந்தவொரு அவகாசமும் கிடைக்கவில்லை.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும், அந்தத் டயர் எந்த வாகனத்திலிருந்து கழன்று வந்தது அல்லது அது எவ்வாறு கழன்றது என்பது குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கண்டறியப்படவில்லை. மேலும், இந்த விபத்தில் நிசான் காரில் பயணம் செய்தவர்களுக்கோ அல்லது அருகில் சென்ற பிற வாகன ஓட்டிகளுக்கோ காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் இருந்து கழன்று ஓடும் டயர்கள் போன்ற பொருள்கள் மிகவும் ஆபத்தானவை என்று போக்குவரத்துப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சாதாரணப் பொருள்களைப் போலச் சறிந்து செல்லாமல், ஒரு டயர் தாறுமாறாகத் திசையை மாற்றித் தாவிச் செல்லும் என்பதால் ஓட்டுநர்களால் எளிதில் தவிர்க்க முடியாது என்கின்றனர். இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வாகனங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலையில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.