கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யும் பாளையங்கோட்டை அண்ணாதுரை சேர்ந்த ஜெனிபர் சரோஜா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெனிபர் தனது காதலனை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளார்.

அப்போது விஜய் தனது சகோதரி கணவரை பிரிந்து குடும்பத்துடன் வசித்து வருவதால் இப்போது திருமணம் செய்து கொள்ள முடியாது சில நாட்கள் கழித்து எனது குடும்பத்தோடு வந்து பெண் கேட்கிறேன் என விஜய் கூறியுள்ளார். இதனால் ஜெனிஃபர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இந்த காதல் விவகாரம் குறித்து அறிந்து ஜெனிபரின் பெற்றோர் காதலை கைவிடுமாறு கூறினர். ஆனால் ஜெனிபர் மனம் மாறவில்லை.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெனிபர் தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் ஜெனிபர் தற்கொலைக்கு முயற்சிக்கு விஜய் தான் காரணம் என அவரது அண்ணன் சிம்சன் கோபமடைந்தார். விஜயை திருநெல்வேலிக்கு வரவழைத்து வீட்டில் பேசி திருமணம் செய்து வைப்பதாக தனது தங்கையிடம் தெரிவித்தார். ஜெனிபர் தனது காதலனிடம் பேசி திருநெல்வேலிக்கு வரவழைத்தார். இந்த நிலையில் விஜய் ஜெனிபரின் வீட்டிற்கு வந்தபோது விஜய்க்கும் சிம்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது சிம்சன் தனது நண்பரான சிவாவுடன் இணைந்து கட்டை மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் விஜயை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.