பொதுவாக உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். நாம் ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட்ட பிறகு பில் கட்டும்போது ஜிஎஸ்டி வரியும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் பில் கட்டும் அவசரத்தில் அதையெல்லாம் நாம் பார்க்காமல் கட்டணத்தை மட்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவோம். கடந்த 2017-ல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஹோட்டல்களில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பது இயல்பான ஒன்றுதான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அனைத்து உணவுகங்களும் ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டியது கிடையாது.
அதாவது கலவை வரி திட்டத்தின் கீழ் இணைந்த உணவகங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்க கூடாது. ஒரு ஹோட்டலின் ஒட்டுமொத்த விற்று முதல் 50 லட்சத்தை தாண்டி இருந்தால் அந்த ஹோட்டல் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியாது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி வசூல் இல்லாத ஹோட்டல்கள் கூட சில சமயங்களில் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரி வசூல் விஷயத்தில் வாடிக்கையாளர்களிடம் சில உணவகங்கள் லாபம் பெறுவதாக கூறி சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான போதிய அளவு விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது.