பிரபல நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் பரத் குமார் என்ற வாலிபர் படம் பார்ப்பதற்காக சென்றார். இவர் லாரி மீது  நடனமாடி கீழே குதித்த போது முதுகு தண்டுவடம் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் நடிகர் சரத்குமார் உயிரிழந்த அஜித் ரசிகரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ஷூட்டிங் கலந்து கொண்ட சரத்குமார் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் பரத் குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு 75 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

அதோடு பரத் குமாரின் சகோதரரின் 3 வருட கல்வி செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக சரத்குமார் கூறியுள்ளாராம். இந்நிலையில் பரத்குமாரின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் தாயார் தான் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறாராம். இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் சரத்குமார் உடனடியாக சென்று குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்ததாக அவருடைய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பரத் குமாரின் மரணம் மற்றும் அவரது குடும்பத்தின் நிலைமை குறித்து அத்தொகுதி எம்எல்ஏ உதயநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சரத்குமார் உறுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.