அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருதரப்பும் வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டிய நிலையில் இரட்டை இலையை முடக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் இருந்ததாக விமர்சனங்கள்  எழுந்துள்ளது. இதனையடுத்து பா.ஜ.க-வின் அறிவுறுத்தலின்படி வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொண்டார் தேர்தல் ஆணையமும் இரட்டை இலையை முடக்கவில்லை.

இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக மாறி உள்ள நிலையில் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் அவரது மகன் மிதுனின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சவுக்கு சங்கரிடம்  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ஒரு சதவீதம் கூட மிதுனின் தலையீடு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நடவடிக்கைகளில் இல்லை. இது மற்ற தலைவர்களின் வாரிசுகளையும் சைலன்ட் மோடில் அடக்கி உட்கார வைக்க பெரிதும் உதவி வருகிறது.  தற்போதைக்கு நேரடி அரசியலில் மிதுனை கொண்டு வருவதற்கான எண்ணமும் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சிறிய உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களும் அப்படி ஒரு வாரிசு அரசியல் வேண்டாம் என இதுவரை நேரடியாகவே கூறி வருகின்றார்களாம். எடப்பாடி பழனிசாமியின் வாரிசு உள்ளே வந்துவிட்டால் மற்றவர்களின் வாரிசுகளும் உள்ளே வந்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது அடுத்தடுத்து பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால் மிதுனின் ஆதிக்கம் எதுவும் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளிலும் சரி அ.தி.மு.க-விலும் சரி எதுவும் கிடையாது. ஆனாலும் இது தற்போதைய நிலை தான் வருங்காலத்தில் வேண்டுமானால் இது மாறலாம். இது குறித்த பின்னணி விஷயங்களை பிறகு சொல்கிறேன் என சவுக்கு சங்கர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.