தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விவாதம் நடந்து வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விருதுகள் குறித்து தகவல் தெரிவிக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் 2009 முதல் 2014 வரை வழங்கப்படாமல் இருந்து விருதுகள் கடந்த செப்டம்பர் நான்காம் தேதி 314 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் 2015 ஆம் வருடத்திற்கான விருது வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2016 முதல் 2022 வரையிலான விருதாளர்களை தேர்வு செய்து தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய எழிலரசன் திரைப்பட கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு வருடம் தோறும் விருதுகள் வழங்கப்படுவது போல பல்வேறு சமூக சிந்தனைகளை விதைத்து வரும் குறும்படங்களுக்கும் அரசு விருது வழங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் சாமிநாதன் இது முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று குறும்படங்களுக்கு விருது வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.