சென்ற 2014 ஆம் வருடம் மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து 8 வருடங்களாக பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கான மருத்துவ செலவுகள் பற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் புனேவை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், இதற்காக 1 ரூபாய் கூட அரசு செலவு செய்யவில்லை எனவும் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர், ஆரோக்கியமான இந்தியா இயக்கம் வாயிலாக மக்களுக்கு செய்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், தானே உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது பற்றி 135 கோடி இந்தியர்களையும் மோடி ஊக்குவித்து வருவதாக தெரிவித்து உள்ளார். வரி செலுத்துவோரின் பணம் எதுவும் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை எனவும், இது ஆளுமை மீதான நம் நம்பிக்கையை அதிகரித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.