மத்தியப்பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த சால் மரக் காடுகளைப் பாதுகாக்க, வனத்துறை ஒரு வினோதமான மற்றும் அதிரடிப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. காடுகளை அழித்து வரும் ‘சால் போரர்’ என்ற ஆபத்தான மர வண்டுகளிடம் இருந்து இயற்கையை மீட்க, 10 லட்சம் வண்டுகளின் தலைகளை விலைக்கு வாங்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

இந்த விசித்திரமான மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்காக சுமார் 20 லட்சம் ரூபாய் நிதியை வாரி இறைக்கத் தயாராகியுள்ளது அரசு. மரங்களுக்குள் புகுந்து, உள்ளிருந்தே அவற்றை அரித்து மரணமடையச் செய்யும் இந்த வண்டுகளை ஒழிக்க ரசாயனங்களைப் பயன்படுத்தாமல், முற்றிலும் ஒரு புதிய இயற்கை உத்தியை வனத்துறை பயன்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் உள்ளூர் பழங்குடியின மக்கள் காடுகளுக்குள் சென்று இந்த வண்டுகளைப் பிடித்து, அவற்றின் தலைகளைச் சேகரித்து வனத்துறையிடம் ஒப்படைத்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்குப் பண வெகுமதி நேரடியாக வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் காட்டின் விலைமதிப்பற்ற சால் மரங்கள் காப்பாற்றப்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் காட்டைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களுக்கு இது ஒரு நல்ல கூடுதல் வருமான வாய்ப்பாகவும் மாறியுள்ளது. காடுகளையும் காத்து, மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்யும் இந்த வனத்துறையின் நூதன முயற்சி இப்போது நாடு முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.