பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோ கும்மிடிப்பூண்டியில் இருக்கிறது. AR Film City என்ற பெயரில் செயல்பட்டு வரும் அந்த ஸ்டூடியோவில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படப்பிடிப்பிற்காக செட் போடப்பட்டு வரும் நிலையில், சாலிகிராமத்தை சேர்ந்த லைட் மேன் குமார் (40) என்பவர் மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் 40 அடி உயரத்தில் இருந்து மின்விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கால்தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் எ.ஆர் ரகுமான் ஸ்டூடியோவில் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.