உண்மையில் தற்போதைய ஆஸி அணி ஒரு டூப்ளிகேட் என்று நினைக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்..
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஒரு பகுதியாக இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முதல் போட்டியில் இந்தியாவிடம் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணியை விமர்சித்தார். தற்போதைய ஆஸி அணி டூப்ளிகேட் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தற்போதைய ஆஸ்திரேலிய அணி குறித்து ஹர்பஜன் சிங் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தத் தொடருக்கு முன், ஆஸ்திரேலிய அணி ரவிச்சந்திரன் அஷ்வின் டூப்ளிகேட்டுடன் பயிற்சியில் ஈடுபட்டது. உண்மையில் தற்போதைய ஆஸி அணி ஒரு டூப்ளிகேட் என்று நினைக்கிறேன். அவர்கள் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள்.
அவர்களின் சிந்தனை முறை எதிர்மறையானது. அவர்களின் குழப்பத்தால், முதல் பந்தை வீசுவதற்கு முன்பே போட்டி முடிந்தது (ஆஸி., தோற்றது) போல் தோன்றியது. இந்தப் பயணத்துக்கான எந்தத் தயாரிப்புகளையும் அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை. அவர்களின் ஆட்டத்தை பார்க்கும்போது, அவுட் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் பயிற்சி செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.’ என்று ஹர்பஜன் விமர்சித்தார்.
இந்த தொடர் தொடங்கும் முன் பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஆஸ்திரேலிய அணி தயக்கம் காட்டியது. பயிற்சிக்காக புல் ஆடுகளங்களை வழங்கிய பிறகு, உண்மையான போட்டிக்கு சுழல் ஆடுகளங்கள் உருவாக்கப்படும் என்று அந்த அணியின் வீரர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள அவர்கள் பல நாட்கள் வலையில் உழைத்தனர். ஆனால் இந்த நடவடிக்கை பலனளிக்கவில்லை. எவ்வளவோ சுழற்பந்து பயிற்சி செய்தாலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னால் நிற்க முடியவில்லை. இதன் மூலம் இந்தியா 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது. ஹர்பஜனும் இதைப் பற்றி பேசினார்.
10 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும் ஒரு போட்டியில் கூட ஆஸியால் வெற்றி பெற முடியாது :
இந்த தொடரை இந்தியா 4-0 என கைப்பற்றும் என்று ஹர்பஜன் சிங் நம்புகிறார். 4 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும் சரி, 10 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும் சரி இந்தியா ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும். இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆஸி அணிக்கு முன்னேறும் சக்தி இல்லை. ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருந்தாலும்… அவர்கள் எளிதாக விக்கெட்டுகளை பறிகொடுக்கிறார்கள் என்று கூறினார்.