இந்திய சினிமாவில் கடந்த வருடம் தென்னிந்திய படங்களே ஆதிக்கம் கொண்டது. குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் வெளியான கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், காந்தாரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் சுமார் 3,800 கோடி வரை வசூலித்தது. கடந்த வருடம் பாலிவுட்டில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசான போதிலும் போதிய வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. கடந்த வருடம் தென்னிந்திய சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே, சீதாராமம், சார்லி 777, சர்தார், திருச்சிற்றம்பலம் மற்றும் டான் போன்ற திரைப்படங்களும் நல்ல லாபத்தை பெற்றது.

கடந்த வருடத்தைப் போலவே நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் தென்னிந்திய சினிமா படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தளபதியின் வாரிசு, தல அஜித்தின் துணிவு, சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாரிசு திரைப்படம் 215 கோடி வசூல் செய்துள்ள நிலையில், துணிவுடன் திரைப்படமும் கண்டிப்பாக 100 கோடி வசூலை தாண்டி இருக்கும் என்று தான் கூறப்படுகிறது. இதேபோன்று வால்டர் வீரய்யா ரூ. 108 கோடியும், வீரசிம்ஹா ரெட்டி ரூ. 104 கோடியும் வசூல் சாதனை புரிந்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தென்னிந்திய சினிமாவில் ஆரம்பத்திலேயே திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருவதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். மேலும் பாலிவுட் சினிமாவில் நடப்பாண்டில் இதுவரை பெரிய ஹீரோக்கள் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், நடிகை ராஷ்மிகா நடித்துள்ள மிஷன் மஞ்சு மற்றும் நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படங்கள் கூடிய விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் பாலிவுட் சினிமா மீண்டும் எழுச்சி பெற்றதா என்பது தெரியவரும்.