ரியான் பராக்கின் தாய் அவரைத் தழுவி ஆரஞ்சு தொப்பியை அணிவித்த வீடியோ வைரலாகி வருகிறது..

2024 ஐபிஎல்லில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 127 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து 3வது வெற்றி பெற்றுள்ளது.

யூஸ்வேந்திர சாஹல் மற்றும் ட்ரெண்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசியது மற்றும் ரியான் பராக்கின் (54 ரன்கள்) அற்புதமான இன்னிங்ஸ் ராஜஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 54* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடிய ரியான் பராக், ஐபிஎல் 2024 ஆரஞ்சு தொப்பியை நட்சத்திர பேட்டர் விராட் கோலியிடம் இருந்து பறிக்க, சீசனின் இரண்டாவது அரை சதத்தை அடித்து நொறுக்கினார். இதுவரை ரியான் பராக் 3 போட்டிகளில் 141.41 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 90.50 சராசரியுடன் 181 ரன்கள் எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை  வீழ்த்திய பிறகு ரியான் பராக் தனது தாயை அணியின் ஹோட்டலை சந்தித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்ட ஒரு வீடியோவில், 22 வயதான ரியான் பராக்கின் தாயார் தனது மகனை கட்டிப்பிடித்து முத்தமிடுவதை காட்டியது, அதே நேரத்தில் அவரது பையில் இருந்து ஆரஞ்சு தொப்பையை எடுத்து தனது மகனின் தலையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.