தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில் சுமார் 8 லட்சம் பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் மற்றும் கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிவித்ததோடு திமுகவை அரசியல் எதிரி என்றும் அறிவித்தார். நடிகர் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்ற நேரடியாக கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக செயற்குழுக் கூட்டத்திலும் திமுகவுக்கு கட்டணம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்களை விஜய் நிறைவேற்றினார்.
இந்நிலையில் திமுக கட்சியின் எம்எல்ஏ பரந்தாமன் தற்போது நடிகர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார். இதுகுறித்து சென்னை பெரியமேடு பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, அரசியலுக்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம். அவர்களுக்கு கூட்டம் கூட தான் செய்யும். ஆனால் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறினார். மேலும் நடிகரை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று ஏற்கனவே பலர் விமர்சிக்கும் நிலையில், தற்போது திமுக எம்எல்ஏ கூறியது விஜயை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.