விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அன்புஜோதி ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜீபின் பேபி(45) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு தமிழகத்தை சேர்ந்த பல ஊர்களில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்கள் தங்கி உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட ஜாபருல்லா (45 என்பவரை இந்த காப்பகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதின் கடந்த 2021 அக்டோபர் 1ஆம் தேதியன்று சேர்த்தார். இதையடுத்து 2022ம் வருடம் ஜாபருல்லாவை காண ஹனிதின் அன்புஜோதி காப்பகத்திற்கு வந்தார். அப்போது அங்கு அவரை காணவில்லை. இது தொடர்பாக ஆசிரம உரிமையாளரிடம் விசாரித்தபோது, ஜாபருல்லாவை பெங்களூரு காப்பத்திற்கு மாற்றி இருப்பதாக கூறினார்.

ஆனால் அங்கும் ஜாபருல்லாவை காணவில்லை. இதுபற்றி ஹனிதின் கெடார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். எனினும் காவல்துறையினர் புகாரை பெற மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான உத்தரவின்படி வருவாய்த்துறை விழுப்புரம் ஆர்.டிஒ. ரவிச்சந்திரன், செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி, சமூகநல அலுவலர் ராஜாம்பாள், மாற்றுத் திறனாளி நல அலுவலர் தங்கல் மற்றும் காவல்துறையினர் அந்த காப்பகத்திற்கு சென்றனர். அங்கு இருந்த 137 பேர் மற்றும் காப்பக உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுகாதாரமற்று இருந்தது. அதோடு இந்த காப்பகத்திலிருந்து 17 பேர் காணாமல் போனது தெரியவந்தது. ஆய்வு நடந்துகொண்டிருந்தபோது காப்பக உரிமையாளர் ஜீபின் பேபியால் வளர்க்கப்படும் குரங்கு அங்கு இருந்த 10க்கும் அதிகமானோரை கடித்து குதறியது. இதையடுத்து அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சையளித்தனர். அதனைத்தொடர்ந்து காப்பகத்திலிருந்து சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அங்கிருந்து மாலை 4 மணிக்கு வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.