உள்ளாட்சி அமைப்புகளால் அனுமதி வழங்காத இடத்தில் கால்நடைகளை பலியிட கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல் எந்த நபரும் எந்த இடத்திலும் செம்மறி ஆடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வெட்ட அனுமதிக்ககூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறிப்பிட்டார். அதோடு கோவில் திருவிழாக்களை தவிர்த்து கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சி கூடம் தவிர வேறு எந்த இடங்களிலும் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என்று கருதியும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வழக்கும் பின்னணி என்னவென்றால், கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவர் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மாதவலாயம் கிராமத்தில் வசித்து வரும் நிலையில், அவரது வீட்டிற்கு அருகே அனுமதி இன்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதோடு அந்த மாட்டிறைச்சி கடையால் குடியிருப்பு பகுதிக்கு மிகவும் சிரமமாக இருப்பதால் அக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட கோரி இருந்தார்.. இந்த மனு நீதிபதி  ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கிராம பஞ்சாயத்து நிர்வாகம் தரப்பில், மாட்டு இறைச்சி கடை வைக்க அனுமதி வாங்கவில்லை. கோழி இறைச்சி கடை நடத்த மட்டுமே உரிமம் பெற்றுள்ளார். ஆனால் மாடு மற்றும் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் எந்த இடத்திலும் செம்மறி ஆடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வெட்ட அனுமதிக்க கூடாது. கோவில் திருவிழாக்களை தவிர்த்து கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சி கூடம் தவிர, வேறு இடங்களில் கால் நடைகளை வெட்டுவது குற்றம் என குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக, அதாவது உரிமம் பெறாமல் மாட்டு இறைச்சி கடை நடத்துவது குறித்து தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரத்துக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.