சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் கோட்டைமேடு பகுதியில் ராமு(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனாம்பாள்(19) என்ற மனைவி இருந்துள்ளார். மோகனாம்பாள் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். டிசம்பர் ஒன்றாம் தேதி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் மோகனாம்பாள் வசிஷ்ட நதியில் குதித்தார். மனைவியை காப்பாற்றுவதற்காக ராமுவும் நதியில் குதித்தார். ஆனால் நள்ளிரவு நேரம் செல்போன் டவரை பிடித்து உயிருக்கு போராடிய ராமுவை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
ஆனால் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். நான்கு நாட்கள் தீவிரமாக தேடியும் மோகனாம்பாள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் வசிஷ்ட நதிக்கரையில் ஒரு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது அது மோகனாம்பாளின் சடலம் என்பது உறுதியானது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.