டெல்லியில் அதிகாலை 4:13 மணிக்கு டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டே ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை வென்றுள்ளது. துஷார் ஜெஜானி என்ற மேலாண்மை ஆலோசகர் தனது அதிகாலை பயணத்தின் போது இந்த சுவாரசியமான அனுபவத்தைச் சந்தித்துள்ளார்.
வெறிச்சோடிய சாலையில் பயணிக்கும் போது ஓட்டுநர் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டு, அவர் தங்களது இருப்பிடத்தை யாரோ ஒருவரிடம் பகிர்கிறாரோ என்று துஷார் முதலில் பயந்துள்ளார். ஓட்டுநர் தனது அசௌகரியத்தைப் புரிந்துகொண்டு பேச்சைத் தொடங்கியதும், துஷார் அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஓட்டுநர், “நான் போனில் யாருடனும் பேசவில்லை சார், சாட் ஜிபிடி செயலி மூலம் ஆங்கிலம் பேசப் பழகிக் கொண்டிருந்தேன். எனக்கு இப்போதுதான் பெண் குழந்தை பிறந்துள்ளது, அவளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இதைக் கற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிலைக் கேட்டு மெய்சிலிர்த்த துஷார், அந்த ஓட்டுநர் வெறும் ஆங்கிலத்தை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை, தன் மகளின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய பாதையை அமைத்து வருகிறார் என்று நெகிழ்ச்சியுடன் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எந்தவித பயிற்றுவிப்பு மையமோ, பெரிய கட்டணங்களோ இன்றி, ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தால் போதும் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாமானிய மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளையும் எவ்வாறு உயர்த்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சிறந்த சான்றாகும்.
