நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டி செட்டிப்பட்டி மோகனூர் ரோடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சேலம் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்தார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ராதாகிருஷ்ணன் படியில் நின்று பயணம் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பூகளூர் வள்ளுவர் நகர் மேம்பால சர்வீஸ் ரோட்டில் சென்ற போது பேருந்து ஓட்டுனர் ராஜா சடன் பிரேக் பிடித்தார். இதனால் ராதாகிருஷ்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராதாகிருஷ்ணன் கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்தை அதி வேகமாக ஓட்டி சென்ற டிரைவர் ராஜா, கண்டக்டர் கலையரசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் அந்த பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.