தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் , தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், தற்போது ‘மகுடம்’ என்ற தனது 35-வது படத்தில் நடித்து வருகிறார்.
‘விஷாலுக்கு எப்போது திருமணம்?’ என ரசிகர்களும், திரை உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னரே தனது திருமணம் நடைபெறும் என விஷால் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் நடந்த ஒரு பட விழாவில், முன்னணி நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், ஆகஸ்ட் 29, 2025 அன்று (இன்று) திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள விஷாலின் இல்லத்தில், விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டார், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து, தடபுடல் விருந்தும் பரிமாறப்பட்டது. 48 வயதாகும் விஷாலின் திருமணத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த நிச்சயதார்த்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே உற்சாகத்தை பரப்பி வருகிறது.
