உத்தரபிரதேசத மாநிலத்தில் உள்ள எட்டாவா மாவட்டத்தில் உள்ள உஸ்ரஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 3 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது தாய் மாமனாருடன் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்றதாகவும், கணவர் கான்பூருக்குச் சென்றிருந்தபோது, அவர் இல்லாத நேரத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அவரது மகள்கள் இருவரையும் கூட்டி சென்றதுடன்,  3ஆவது குழந்தையான மகனை மட்டும் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

மேலும் , அப்பெண் 4 தங்க மோதிரங்கள், 2 நெக்லஸ், தாலி  மற்றும் ரூ.50,000 மதிப்புள்ள பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார்.  இது  குறித்த தகவல் அவருடைய உறவினரிடம் இருந்து பாதிக்கப்பட்ட கணவருக்கு தெரியவந்தது. அதில், அவரது மனைவி தனது தாய் மாமனாருடன் ஓடிவிட்டதாகவும், இருவரும் மொபைல் போன் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் தொடர்பை துண்டித்துள்ளதாகவும்  கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கணவர்  கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றதாகவும், அப்போது காவல் நிலைய பொறுப்பாளர் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர், அந்த வழக்கு “காணாமல் போனவர்” என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகும் எந்த விசாரணை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட கணவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தனது மனைவியைக் கண்டுபிடிக்க உதவுகிறவர்களுக்கு ரூ.20,000 பரிசு வழங்குவதாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். தற்போது, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அப்பெண் மற்றும் அவரது மாமனாரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க விசாரணை குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.