அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் நாளை விசாரணை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை இன்னும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்ந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அவர் சபாநாயகரிடம் ஓ. பன்னீர் செல்வத்திற்கு எதிர் கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்க கூடாது என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.