பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

சமீபத்தில் தமிழகத்தின் அடையாளமான சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை. அச்சம்பவத்தில் கைதான ஞானசேகரன் திமுக நிர்வாகி அல்ல. திமுக அனுதாபி என சட்டமன்றத்திலேயே முதல்வர் கூறும் அளவிற்கு தள்ளப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் மீது கல்லூரி மாணவி அளித்த புகார் மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரில் தன்னை பாலியல் வன்கொடுமை ஆளாக்கியது மட்டுமல்லாமல், திமுக முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்தார் என கூறுவது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.

திமுக நிர்வாகி தெய்வசெயல் மீது மாணவி புகார் அளித்ததை அடுத்து காவல்துறை இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்த பிறகு காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. திமுக அரசு பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை மறைக்கவே முயற்சிக்கிறது.

வேறு வழி இல்லாத சூழ்நிலையில் மட்டுமே இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அதன் பிறகு சம்பவத்திற்கான முடிவுகள் என்ன ஆகிறது என்பதே தெரியவில்லை. அரக்கோணம் கல்லூரி மாணவி அளித்த புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில்  ஈடுபட வேண்டும். மேலும்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் திமுக பிரமுகராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் எடுத்து விசாரணை நடத்தி வருவது மிகவும் பாராட்டக் கூடியது. தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழ்நாடு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.