
பொறியியலில் பல அதிசயங்களை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வீடியோவில் உள்ள கட்டிடம் பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது. சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவொன்றில், வெறும் 3 அடி நிலத்தில் மூன்று மாடி வீடு கட்டப்பட்டிருப்பது காணப்படுகிறது.
View this post on Instagram
இந்த வீடியோ, @smart_amroha என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டதுடன், 1 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
வீடியோவில் காணப்படும் இந்த வீடு இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்களில் அழகாக காணப்படுகிறது. இதன் அடிப்பகுதியில் கதவுக்குப் பதிலாக ஒரு ஷட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேல் மாடிகளுக்கு செல்ல படிக்கட்டுகள், சிறிய அறைகள் மற்றும் தேவையான வசதிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பார்ப்பதற்கு இது ஒரு பொம்மை வீடு போலத் தெரிந்தாலும், உண்மையில் இது ஒரு முழுமையான வீடாக உள்ளது. மிகவும் குறுகிய இடத்திலும், இது போன்ற வடிவமைப்புடன் கட்டப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த மக்கள், “இது வீடா அல்லது லிஃப்டா?” என்று கேட்க, மற்றொருவர், “இதுபோன்ற வீடு ரியல் எஸ்டேட் வரலாற்றில் முதல் முறையாக இருக்கலாம்” எனக் கூறியுள்ளார். சிலர், இது தெரு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக விமர்சிக்க, மற்றவர்கள் பொறியியல் வித்தையால் இது சாத்தியமானது என பாராட்டுகின்றனர்.
இந்த வீடு பற்றிய விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. ஆனால், இளம் பொறியாளர்களின் கற்பனை மற்றும் தொழில்நுட்ப அறிவின் விளைவாக, இன்று சுருக்கமான இடத்திலும் பல வசதிகள் கொண்ட வீடுகள் கட்டப்படுவதற்கான சாத்தியங்கள் வெளிப்படுகின்றன.
குறைந்த செலவில், அதிக பயனுள்ள வீடுகள் கட்டும் நோக்கத்தில் இது ஒரு புதிய சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கிறது என்பதே சமூகத்தின் கருத்தாக உருவெடுத்து வருகிறது.