தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில், பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிட்டு பஞ்சாயத்துக்கு உட்படுத்தும் சூழல் உருவாகிறது. இந்தச் சூழ்நிலையை எதிர்த்து, ஒரு சிறுவன் தனது அம்மா ஒரு உறவினரிடம் CBSE தேர்வு முடிவுகளைப் பற்றி கேட்க முயற்சிக்கும் தருணத்தில் தலையிட்டு தடுக்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த தாய் ஒரு உறவினரிடம் அவரது பிள்ளையின் தேர்வு எப்படி இருக்கிறது என்று கேட்க மொபைலை எடுக்க முயற்சிக்கிறார். அந்த நேரத்தில், அந்த சிறுவன் அமைதியாக உள்ளே வந்து, “அதுல என்ன இருக்குது, அம்மா? அவங்க ரிசல்ட் கேக்கணும்னு அவசியமா? விட்டுடுங்க…” என கேள்வி எழுப்புகிறான்.

மேலும், “ஏன் கேட்கணும்? அவர்களுடைய பிள்ளை உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மதிப்பெண்கள் எடுக்கலைனா என்ன? அவர்களே வீட்டில்  டென்ஷன்ல இருக்காங்க. அது அவர்களுடைய வாழ்க்கை, அம்மா…” என மிகுந்த உணர்வோடு பதிலளிக்கிறான்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கிட்டத்தட்ட  1.39 லட்சம் பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக் மற்றும் பகிர்வுகளையும் பெற்றுள்ளது. “நீண்ட காலமாக உள்ள ஸ்டீரியோடைப்களை உடைப்பது நம்மிடமுள்ள பொறுப்பு. இந்த சிறுவனுக்கு வாழ்த்துகள்!” என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பலரது மனதையும் தொட்டுள்ளது.

பல சமூக ஊடக பயனர்கள் அந்த சிறுவனின் செயலுக்கு பாராட்டுகளை கூறியுள்ளனர். ஒருவர், “அழகான மனிதர்… மனதை குளிர வைக்கும் வார்த்தைகள்,” என்று பதிவு செய்துள்ளாா். மற்றொருவர், “எனக்கும் பள்ளி நாட்களில் இது போன்ற ஒப்பீடுகள் வந்திருக்கின்றன. 86% எடுத்தாலும் குறைவாகத்தான் சொல்வாங்க,” என கருத்து தெரிவித்துள்ளாா்.

மேலும் ஒருவர், “நீங்கள் அவர்களின் படிப்பு செலவுகளை ஏற்கவில்லை என்றால், ரிசல்ட் நாளில் கேட்கும் உரிமையும் உங்களுக்கு இல்லை,” என பதிவிட்டுள்ளார். இச்சிறுவனின் செயல், மாணவர்களின் தனித்துவத்தையும் மனநிலையையும் மதிக்க வேண்டிய தேவையை சமூகத்தில்  எடுத்துரைத்துள்ளது.