உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  அவுரையா மாவட்டத்தில் உள்ள சதார் கோட்வாலி பகுதியில் இடம்பெற்ற ஒரு விசித்திரமான திருட்டு சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம நபர்கள், விலைமதிப்பான பொருட்கள் அல்லாமல், நேராக 5 பன்றிகளை திருடிச் சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் கடந்த ஜூன் 29-ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து, அவரது 5 பன்றிகளை எடுத்து சென்றுள்ளதாகவும், அந்த பன்றிகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கோட்வாலி பொறுப்பாளர் ராஜ்குமார் சிங் தெரிவித்ததாவது, “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

பன்றிகளை காரில் ஏற்றிச் சென்ற காணொளி வெளியாகியதைத் தொடர்ந்து, இது தொடர்பான விவாதங்கள் சமூக ஊடகங்களில் வெடித்தெழுந்துள்ளன.

விலைமதிப்பான பொருட்களை விட்டுவிட்டு, கால்நடைகளை குறிவைத்து திருடும் இந்த வகை மர்ம சம்பவங்கள், அதிர்ச்சியையும் புதிய விதமான திருட்டு பாணியையும் வெளிப்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் முழு மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.