உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் முக்கியமான மதிப்பாகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், மற்ற நாடுகளின் பண மதிப்பை தாழ்த்தவும் வழிவகுக்கிறது. அதனைத் தவிர, உலகளாவிய பொருளாதாரம், டாலரின் மதிப்பில் நடந்துகொண்டிருப்பதால், பெரும்பாலான பொருட்கள் வாங்கவும் விற்கவும் டாலர் பயன்படுகிறது. கச்சா எண்ணெய், தங்கம் போன்ற முக்கியமான பொருட்கள் டாலரில் வாங்கப்படுவதால், உலக நாடுகளும் டாலரின் மதிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

இவ்வாறு அமெரிக்க டாலர் உலகளாவிய பண மதிப்பாக இருந்து வருவது, மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்திய ரூபாயின் மதிப்பு டாலரின் எதிரான வளர்ச்சியால் பாதிக்கப்படுகிறது. இதே பிரச்சினை ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகளுக்கும் உள்ளது. இதனாலேயே இந்த நிலையை சமாளிக்க, பிரிக்ஸ் நாடுகள், பொதுவான ஒரு நாணயத்தை உருவாக்கி, டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்துள்ளன.

ரஷ்யா, இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டணியில், வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ஒரு புதிய பொதுவான நாணயத்தை உருவாக்க ரஷ்யா முன்மொழிந்துள்ளது. இந்த நாணயத்தின் மூலம், பிரிக்ஸ் நாடுகள் ஒன்றுக்கொன்று பண பரிமாற்றம் செய்ய முடியும். இதன்மூலம், டாலரின் புழக்கத்தை குறைத்து, அந்த நாடுகளின் பண மதிப்பை உயர்த்தும் வாய்ப்புகளை அவை காண்கின்றன.