
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம் என்றும் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அனுமதி இன்றி போராட்டம் நடைபெற்றதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அராஜகப் போக்கு என்று கூறி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மகளிர் தினத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சமீபத்தில் மும்மொழிகல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்ம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் பெண்களின் பாதுகாப்புக்கான கையெழுத்து இயக்க பேனரை அவர்கள் வைத்தனர். அந்த பேனரில் we stand for women harrasement என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதற்கு அர்த்தம் பெண்களை துன்புறுத்துவதற்காக நாங்கள் நிற்கிறோம் என்பதாகும். மேலும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.