DMK சார்பில் நடைபெற்று வரும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு மாபெரும் உண்ணா நிலை அற  போராட்டத்தை  நாம் எல்லோரும் எந்த உணர்வோடு மேற்கொண்டோமோ, அதே  உறுதியோடு இந்த கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்கியுள்ளோம். இங்கு மட்டும் அல்ல தமிழ்நாடு முழுவதும் அனைத்து கழக மாவட்டங்களிலும் இந்த இயக்கத்தை துவங்கி இருக்கின்றோம்.

இது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணிகள் நடத்துகின்ற  கையெழுத்து இயக்கம் என்றாலும்,  இதனை ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வை நாம் ஒழித்தாக வேண்டும். இந்தி திணிப்பு தொடங்கி,  இப்ப புதிய கல்விக் கொள்கை வரைக்கும் நம்முடைய கல்வி உரிமை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று பாசிஸ்ட்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அவற்றை எதிர்த்து நாமும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றிய அரசோ இன்னும் அதிகமாக எப்படி நம் கல்வி உரிமையை சிதைக்கலாம் என்று சிந்திக்கிறது. நீட் தேர்வால்  தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற பாதிப்பை புரிந்து கொள்ள ஒன்றிய அரசு மறுக்கின்றது.

நீட்டுக்கு  எதிராக நாம் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது,  மக்கள் மன்றத்தில் போராடினோம்.  பிறகு ஆளும் கட்சியாக வந்த பிறகு சட்டமன்றத்தில் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும்,  கடமைகளையும் தொடர்ந்து உண்மையாக செய்திருக்கிறோம். நீட்  விலக்கு மசோதாவை செப்டம்பர் 2021 இல் நிறைவேற்றினோம். அதை நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பினார்.

மறுபடியும் அடுத்த நாளை பிப்ரவரி 8ஆம் தேதி 2022இல் மீண்டும் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றினோம்.  இப்போ அந்த மசோதா 21 மாதங்களாக குடியரசு தலைவருடைய ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட அந்த மோசோதாவிற்கு ஒப்புதல் தரவேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குடியரசு தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். நீட் தேர்வால் அனிதாவில் ஆரம்பித்து,  ஜெகதீஸ்வரன் வரை இதுவரை 22 உயிர்கள் போய் இருக்கின்றது  என தெரிவித்தார்.