குஜராத் மாநிலம் அஹமதாபாத்தைச் சேர்ந்த ஜெயின் லோடஸ் குழுவின் 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தீபாவளிக்குப் பிறகு துருக்கிக்கு செல்ல திட்டமிட்ட 12 நாட்கள் கொண்ட சுற்றுலா பயணத்தை தங்கள் நாட்டுப்பற்றுக்காக ரத்து செய்துள்ளனர். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான உயர் நிலை பதற்றங்கள் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய நிலையில், துருக்கி மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜெயின் லோடஸ் குழுவில் 1,000க்கும் மேற்பட்ட தம்பதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தீபாவளிக்குப் பிந்தைய சுற்றுலாவாக, இஸ்தான்புல், கப்படோகியா உள்ளிட்ட நான்கு முக்கிய இடங்களை 11 இரவுகள் மற்றும் 12 நாட்கள் சுற்றிப் பார்ப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மூன்றாவது நாளிலும் 80 பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் துருக்கிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்த துருக்கியின் நிலைப்பாட்டை எதிர்த்து, குழுவின் மையக்குழு உறுப்பினர்கள், தலைவர், இணைச் செயலாளர் உள்பட, அனைவரின் கருத்துக்களை பெற்ற பின்னர் ஒருமித்தமாக சுற்றுலாவை ரத்து செய்தனர்.

இந்த முடிவை அறிவித்த குழுவின் பணிப்புரையாளர் விபுல் ஷா கூறுகையில், “நாம் ராணுவம் போல போர் செய்ய முடியாது. ஆனால், துருக்கியை புறக்கணிப்பதன் மூலம் நம் நாட்டுக்காக எதையாவது செய்யலாம் எனவே இதைத் தீர்மானித்தோம். இது நம் கடமையின் சிறிய பகுதியே” என்று தெரிவித்தார்.

MakeMyTrip நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த ஒரு வாரத்தில் துருக்கி மற்றும் அசர்பைஜானுக்கு செல்லும் முன்பதிவுகள் 60% வரை குறைந்துள்ளதுடன், ரத்தாகும் பயணங்கள் 250% வரை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.