
இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது செல்போன் மக்களின் வாழ்வாதாரமாக மாறி உள்ளது. இந்த செல்போனில் பல நன்மைகள் மற்றும் பல தீமைகளும் காணப்பட்டாலும், இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் 8 மணி நேரத்திற்கு செல்போனை பயன்படுத்தாமல் இருக்கும் போட்டி ஒன்று நடைபெற்றது. இந்தப் போட்டிற்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 10 பேர் மட்டுமே இந்த போட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். அந்த போட்டியில் 10 நபர்களின் செல்போன்கள் வாங்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு படுக்கை அளிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் அந்த படுக்கையில் தூங்குவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பாத்ரூம் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போட்டியாளர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு தேவைப்படும் நேரத்தில் கண்காணிப்பாளர்கள் அவர்களுக்கு வழங்கினர். அவர்கள் அந்த படுக்கையில் படுத்திருக்கும் போது பதட்டப்படாமல் இருக்க வேண்டும். அவர்களது மன அழுத்தத்தை கண்காணிப்பதற்காக போட்டியாளர்களின் கையில் வாட்ச் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தையும் டோங் என்ற பெண் சரியாக செய்து 100க்கு 88.99 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அந்தப் பெண் நீண்ட நேரம் படுக்கையில் இருந்தது மட்டுமில்லாமல் அவரது மன அழுத்தத்தை குறைவாக காட்டி உள்ளார். இதனால் அவருக்கு 1.16 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக போட்டி அமைப்பாளர்கள் வழங்கி உள்ளனர்.