தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 40 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த வாரம் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது வகுப்பறையிலிருந்த நாற்காலிகள், மேஜையை தூக்கி வீசியுள்ளனர். இதனையடுத்து கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது, சில மாணவ- மாணவிகள் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜை, நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்திய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ரகளையில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.