பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து  பணியிலிருந்த கண்டெக்டர் ரூ.29 விலையுள்ள டிக்கெட்டை அவரிடம் வழங்கினார். அப்போது ரமேஷ் நாயக் பேருந்து கண்டெக்டருக்கு ரூ.30 கொடுத்தார்.

இதனிடையே ரமேஷுக்கு மீதம் 1 ரூபாய் பாக்கியை கொடுக்கவில்லை. அதன்பின் பேருந்து நடத்துனரின் செயலால் பாதிக்கப்பட்ட ரமேஷ் நாயக் ரூ.15,000 இழப்பீடு கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பேருந்தில் தன்னிடம் கண்டெக்டர் அநாகரிகமாக நடந்துக் கொண்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ரமேஷ் நாயக்கின் குறைகளை கருத்தில் கொண்ட பெங்களூரு நகர்ப்புற நுகர்வோர் தீர்வு ஆணையம், நீதிமன்ற கட்டணமாக ரூ.1000 உடன் பகுதி நிவாரணமாக ரூ.2,000 செலுத்துமாறு பிஎம்டிசிக்கு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இத்தொகையை 45 தினங்களுக்குள் செலுத்துமாறு பிஎம்டிசிசிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தவறினால் வருடத்திற்கு ரூ.6,000 வரை வட்டி செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. கடந்த 2002 ஆம் வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் பட பாணியில் பேருந்தில் 1 ரூபாய் தர மறுத்து திட்டிய நடத்துனருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.