தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இது குறித்து தற்போது முதல்வர் ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மனித குலத்தின் தொல் நாகரிக இனமாம் நம் தமிழ் இனத்தின் பழம்பெரும் பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் பெரும் பேற்றை நான் பெற்றேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகை நதி கரையில் அமைந்திருக்கும் கீழடி நகரத்தின் வயது 2600 ஆண்டுகள். அகழாய்வில் ஆழமாக தோண்ட தோண்ட எண்ணில் அடங்கா புதையல்களை எடுத்து வருகிறோம்.

இதில் கல்மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள் மூலம் நாம் தெரிந்து கொண்ட விஷயங்களுக்கான சான்று தான் கீழடி அகழாய்வு. இவை அனைத்தையும் தற்போது தமிழக அரசு அருங்காட்சியமாக மாற்றியுள்ளது. ஈராயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாக கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைவரும் வந்து பார்க்கக்கூடிய அருங்காட்சியகம். காலத்தை பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் அழைத்துச் செல்ல போகிறது. வரலாறு படிப்போம் வரலாறு படைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.