தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் மார்ச் 8-ம் தேதி வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்கிறார்கள். வட மாநில தொழிலாளர்கள் முன்பதிவு செய்யாமல் சாதாரண பெட்டிகளில் டிக்கெட் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறி பயணம் செய்வதால் பயணிகளுக்கு தற்போது தொந்தரவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்-பரௌனி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ஏறி உள்ளனர்.

இந்த ரயில் சேலத்தில் உள்ள ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு வந்த பிறகு, ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் முன்பதிவு பெட்டிகளில் ஏறியுள்ளனர். இதனால் ரயில் புறப்படும் நேரத்தில் அதிலிருந்து பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் பயணிகள் நடந்ததை கூறினார்கள். இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்த 140 வட மாநில தொழிலாளர்களை ரயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.

அவர்கள் ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று ஆலப்புழா-தன்பாத் ரயில் சேலத்திற்கு வந்தபோது முன்பதிவு பெட்டியில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ஏறி உள்ளனர். இதனால் முன்பதிவு செய்து பயணித்தவர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முன்பதிவு செய்யாத வட மாநில தொழிலாளர்களிடம் கீழே இறங்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால் ரயில்வே அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் வட மாநில தொழிலாளர்கள் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களை கீழே இறக்கி விட முடியாத சூழல் ஏற்பட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் சிலர் ரயில்வே டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் ரயில் பயணம் என்பது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.