துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா, லெபனான், இஸ்ரேல் உட்பட அண்டை நாடுகளிலும் இது உணரப்பட்டுள்ளது.

இதுதான் நூறாண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. அதாவது அதிகாலை நேரம் வீடுகளில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இதனால் இடுப்பாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் சிரியாவின் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து நிலநடுக்கத்தால் இதுவரை 1300 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10,000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் இந்தியாவை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 100 பேர் கொண்ட 2 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் விரைவில் அங்காராவிற்கு செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.