சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 405 இடங்களில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏற்கனவே இருந்த தார் சாலைகள் சுரண்டப்பட்டு அதன் மீது புதுசாலைகள் போடப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் 204.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 1,157 சாலைகள் போடப்பட இருக்கிறது. சமீபத்தில் ரூ. 124.7 கோடி மதிப்பீட்டில் 405 சாலைகளின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பகல் நேரங்களில் வாகனங்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் இரவு நேரங்களில் பணிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று முன்தினம் சென்னையில் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை சாலை போடும் பணிகளை ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்துள்ளனர். மேலும் திடீரென இறையன்பு ஐஏஎஸ் இரவு நேரத்தில் சாலை பணிகளை ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.