பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்றில் 10 நபர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சமேலி பகுதி அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதியது.

இதனால் காரின் முன் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இரண்டு பேரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 8 பேரின் உடல்களையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் பெயர்கள், முகவரிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த விபத்து குறித்த விசாரணையில், ஒரு திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது எனவும், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவருமே ஆண்கள் என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.