தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிலும் தமிழர் பண்பாடும் உள்ளிட்ட 7 தமிழ்க்கனவுடன் அறிவிப்புகள் வெளியானது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்த  பட்ஜெட்டில், சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு. தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. 2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிமுகம் செய்யப்படும். ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு இணைய வசதிகளை செயல்படுத்த ரூ.3,206 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.10 கோடி மானியம் பள்ளிவாசல் மற்றும் தர்காக்களை புனரமைக்க வழங்கப்படும். சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,429 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மீன்பிடி தடைக்கால மானியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகம் உயர்ந்துள்ளது. தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”

மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப்கார் வசதிகள் அமைக்கப்படும். ரூ 5718 கோடி மதிப்பிலான 6071 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 2024-25 நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் சிற்றுந்து சேவை திட்டம் விரிவுபடுத்தப்படும் ஜப்பான் வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் 500 மின் பேருந்துகளை கொள்முதல் செய்து இந்த நிதி ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

தூத்துக்குடி குலசேகரன் பட்டினத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்கப்படும்.தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ₹120 கோடியில் அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும், மதுரையில் 25,00 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்.

500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்” திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தில் மாதம் தோறும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.