தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராக உள்ளது. இன்று வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் முழுக்க முழுக்க மாஸ் ஆக்‌ஷன் மற்றும் தற்போதைய அரசியல் சூழலுக்குப் பொருந்தும் வகையிலான அதிரடி வசனங்களால் நிரம்பியுள்ளது. “சம்பவம் பண்றவனப் பத்தி கேள்விப்பட்டிருப்ப, அதுலயே ரெக்கார்டு வைக்கிறவனப் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?” என விஜய் எண்ட்ரி கொடுக்கும்போதே தியேட்டர் அதிருமளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன: “மக்களுக்கு நல்லது பண்றேன்னு இதுக்குள்ள வராத, ஓடிப் போயிடு” என வில்லன் பாபி தியோல் மிரட்ட, அதற்குத் தனது ஸ்டைலான சிரிப்பால் விஜய் பதிலடி கொடுக்கிறார்.

“மொத்த அயோக்கியனுங்களும் ஒண்ணா நிக்கிறானுங்க, அவங்க ஜெயிக்கக் கூடாது” என விஜய் பேசும் வசனம் தற்போதைய தமிழக அரசியலைச் சாடுவது போல் உள்ளது.

ட்ரெய்லரின் இறுதியில், “உன்னைக் காலி பண்ணிடுவேன்னு சொல்ற எவனா இருந்தாலும் சரி.. திரும்பிப் போற ஐடியாவே இல்ல.. I am coming!” என விஜய் பேசுவது, அவர் அரசியலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

பின்னணியில் ஒலிக்கும் “ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிறேன் எவன்டா?” என்ற பாடல் வரிகள் ட்ரெய்லரின் வேகத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளது.