விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எவ்வளவு கடுமையான பயணம். காட்டாற்று வெள்ளம் என்று சொல்வார்களே… நெருப்பாறு என்று சொல்வார்களே அப்படிப்பட்ட நெருப்பாற்றிலே நீந்தி நாம் ஒரு இலக்கை சேர்ந்திருக்கிறோம், அடைந்திருக்கிறோம். எந்த பின்புலமும் இல்லை. பொருளாதார பின்புலம் இல்லை. பெரிய பணக்காரர்கள் யாரும் கட்சியில் கிடையாது.

வெறுங்கை முழம் போடுமா என்று சொல்வார்கள் கிராமத்திலே பழமொழி. ஆனால் அது நம்முடைய வரலாற்றிலேயே வெறுங்கை முழம் போட்டது என்பது தான். அது ஒரு நீண்ட நெடிய வரலாறு.  நம்மோடு பயணித்தவர்கள் பாதியிலேயே நின்ற போனார்கள். காணாமல் போனார்கள்… எங்கோ போய் கரைந்து போனார்கள்… அடையாளங்களை மாற்றிக் கொண்டார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் தொடக்க காலத்தில் எத்தகைய வீரியத்தோடு கிளம்பியதோ, அதைவிட பன்மடங்கு வீரியம் பெற்ற ஒரு வலுவான அமைப்பாக இன்றைக்கு அரசியல் களத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறோம். அதனடிப்படையில் தான் தோழர்களே…  40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்கின்ற பார்வை. இது மிக முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.  தேர்தல் முகவர்கள் யாரும் மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் இல்லை.  இங்கே வருகை தந்து இருக்கிற 14,000 பேரும் வேர்களாக இருப்பவர்கள்.  கீழே இந்த இயக்கத்தின் வேர்களாக இருப்பவர்கள்.  வேர்களை வெளிச்சத்தில் பார்க்கிறோம்.  வேர்களுக்கு இருக்கைகள் தந்து அழகு பார்க்கிறோம்.

வேர்களை மேலும் வளிமைப்படுத்துவதற்கான களத்தை அமைத்திருக்கிறோம். மாவட்ட நிர்வாகிகளோ, ஒன்றிய நிர்வாகிகளோ, மாநில நிர்வாகிகளோ பங்கேறிக்கிற நிகழ்ச்சி அல்ல இது. ஆதரவாளர் உட்பட அனைவரும் பங்கேற்கும் மாநாடு அல்ல.  கட்சியின் வேர் கால்களை சந்திக்கின்ற நிகழ்வு. வேர்களோடு உரையாடுகின்ற நிகழ்வு. வேர்களை வலுப்படுத்துவதற்கான நிகழ்வு இது. உங்களோடு உரையாடுவதற்கான ஒரு களம்.

இந்த 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடப் போவதில்லை. அல்லது 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட போவதில்லை. சில பேர் கேட்கலாம்…  ஏன் 40 தொகுதியில் தனித்து நின்றால் என்ன ? அது ஒரு அரசியல் அறியாமை.  தேர்தல் அரசியலைப் பற்றி புரிதல் இல்லாதவர்கள் பேசுகிற ஒரு கருத்து.

ஒரு விளையாட்டு போட்டிக்கு போக வேண்டும் என்றால் கூட முன்கூட்டியே விளையாடி பயிற்சி பெற வேண்டும். கபடி விளையாடணும்ன்னு நினைச்சாலும் கூட  திடீர்னு இறங்கி ஜெயிச்சிட முடியாது.கோலி குண்டு விளையாட்டில் கூட திடீர்னு  போய் கோலிக் குண்டு  அடிக்க முடியாது.

அதுக்கு ஒரு பயிற்சி தேவை. பயிற்சி பெறாமல் யாரும் போட்டியிலே வென்று விட  முடியாது. தேர்தல் களம் அதைவிட கடுமையான சூது, சூழ்ச்சி  நிறைந்த ஒரு களம். யார் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பது தெரியாது ? அப்படிப்பட்ட சூது, சூழ்ச்சி நிறைந்த களம். இந்த களத்தில் வெற்றி பெற வேண்டுமானால் ? ஒரு நீண்ட நெடிய அனுபவம் தேவை. அதைவிட முக்கியமாக பயிற்சி தேவை என தெரிவித்தார்.