திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகோட்டையூர் காவலர் பள்ளியை அரசு மூடுவதற்கு அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் பள்ளியை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக உலக தரத்தில் அதிமுக ஆட்சியால் மேலக்கோட்டையூரில் காவலரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளி கட்டப்பட்டது.

தற்போது 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் கல்வி ஆண்டில் ஆங்கில வழியில் இரு பாலரும் படிக்கும் வகையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படும் என அதிமுக அரசு ஆணை பிறப்பித்தது. அதிமுக அரசு கொண்டுவந்த ஒரே திட்டம் என்ற காரணத்திற்காக திமுக அரசு தற்போது காவலர் பள்ளியை மூட நினைக்கிறது. தமிழக அரசின் இந்த ஆணை காவலர்கள் மத்தியில் இடி போல் இறங்கியுள்ளது. இந்த ஆணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறுவதோடு 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அம்மா அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் காவலர் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தி தொடர்ந்து பள்ளியை நடத்திட வேண்டும் என இந்த அரசை நான் வலியுறுத்திக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.